வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 9 வீரர்கள் காயம்: மரத்தில் மோதி காளை சாவு
By DIN | Published on : 27th January 2017 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 9 வீரர்கள் காயமடைந்தனர். மரத்தில் மோதி காளை உயிரிழந்தது. வேப்பந்தட்டை அருகேயுள்ள அரசலூர் கிராமத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி, அன்னமங்கலம், அரசலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
9 மாடுபிடி வீரர்கள் காயம்:
சீறிப்பாய்ந்த காளைகளை பெரம்பலூர், திருச்சி, சேலம், ஆத்தூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வெற்றனர். தொண்டப்பாடி கிராமம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வடிவேல் (22) உள்பட 9 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மரத்தில் மோதி காளை சாவு:
வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட அன்னமங்கலத்தைச் சேர்ந்த கு. செபஸ்டியானின் காளை, மீண்டும் வாடிவாசலுக்குள் சென்று வெளியேறிய வேகத்தில் அங்குள்ள மரத்தில் மோதி உயிரிழந்தது. இதையடுத்து அக்காளையை சுமை ஆட்டோ மூலம் ஊருக்கு எடுத்துச் சென்றனர். 10 மணிக்கு பிறகு வந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 2 மணி வரை நடைபெற்ற போட்டியில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.