சுடச்சுட

  

  தமிழகத்தில் முதல்முறையாக பெருமத்தூர் துணை சுகாதார நிலையத்தில் 2 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் தகவல்

  By DIN  |   Published on : 29th January 2017 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் முதல்முறையாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்துக்குள்பட்ட பெருமத்தூர் துணை சுகாதார நிலையத்தில் 2 கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
  வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூரில் தாற்காலிக கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமையும் அமைச்சர் பார்வையிட்டார்.
  தொடர்ந்து, வேப்பூர் வட்டம், பெருமத்தூர் கிராமத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை திறந்துவைத்த அமைச்சர், ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு அமைச்சர் மேலும் பேசியதாவது:
  ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைத் திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியரை நியமிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போது, பரீட்சார்த்த முறையில் முதல்முறையாக பெருமத்தூர் துணை சுகாதார நிலையத்தில் 2 கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம், தமிழகத்தில் பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முறையே வேப்பூர், விராலிமலை மற்றும் சூளகிரி ஆகிய வட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு செவிலியர் துணை சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவச் சேவைகளை வழங்க வேண்டும். மற்றொரு செவிலியர் கிராமத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவச் சேவைகளை வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
  இந்நிகழ்ச்சிகளில், தேசிய ஊரக சுகாதாரத் திட்ட இயக்குநர் தரேஸ் அஹமது, பெரம்பலூர் ஆட்சியர் க. நந்தகுமார், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, எம்.பி.க்கள் ஆர்.பி. மருதைராஜா (பெரம்பலுர்), மா. சந்திரகாசி (சிதம்பரம்), எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. ராமச்சந்திரன்(குன்னம்), பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்
  சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai