Enable Javscript for better performance
போலி கையெழுத்திட்டு முதியவரின் வங்கிக் கணக்கில் பணம் எடுத்த நபர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போலி கையெழுத்திட்டு முதியவரின் வங்கிக் கணக்கில் பணம் எடுத்த நபர் கைது

    By DIN  |   Published on : 31st January 2017 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் புறநகர் பகுதியில் உள்ள வங்கியில், போலி கையெழுத்திட்டு முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 28 ஆயிரம் எடுத்த ஆத்தூரை சேர்ந்த நபரை பெரம்பலூர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    பெரம்பலூர் அருகேயுள்ள மங்கலமேடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (60). விவசாயி. இவர், பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி வங்கிக்கு சென்ற கருப்பையா, அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக காத்திருந்தார்.
    கருப்பையாவுக்கு எழுத, படிக்க தெரியாததால் பணம் எடுப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தருமாறு வங்கிக்கு வந்திருந்த நபரை அணுகியுள்ளார்.
    படிவத்தை பூர்த்தி செய்த அந்த நபர், முதியவரின் கணக்கில் இருந்து ரூ. 10 ஆயிரத்தை வங்கியாளர்களிடம் இருந்து பெற்று முதியவரிடம் அளித்தார். அதை பெற்றுக்கொண்ட கருப்பையா வங்கியிலிருந்து சென்றுவிட்டாராம். இதையடுத்து அந்த நபர், முதியவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக போலி கையெழுத்திட்டு கடந்த 26 ஆம் தேதி வரை ரூ. 28 ஆயிரத்தை எடுத்துள்ளார்.
    இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி பணம் எடுப்பதற்காக கருப்பையா வங்கிக்கு சென்றபோது அவரது கணக்கில் பணம் இல்லை என, வங்கியாளர்கள் தெரிவித்தனர்.
    இதனால், ஆத்திரமடைந்த அவர் தனது உறவினர்களுடன் வங்கிக்கு சென்று விசாரித்ததில், போலி கையெழுத்திட்டு பணம் எடுத்திருப்பது தெரியவந்தது.
    இதனடையே, முதியவரின் வங்கி கணக்கில் இருந்து மீண்டும் பணம் எடுப்பதற்காக திங்கள்கிழமை வங்கிக்கு வந்த அந்த நபரை வங்கியாளர்கள் பிடித்து, பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
    அங்கு சென்ற போலீஸார், அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த பூமாலை மகன் குமார் (45) என்பது தெரியவந்தது.
    கருப்பையா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai