சுடச்சுட

  

  தமது படைப்புகளில் தமிழ் மொழியையும், இனத்தையும் ஆழமாக பதிவு செய்தவர் பாரதிதாசன் என்றார் அரியலூர் அரசுக் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் க. தமிழ்மாறன்.
  பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில் பாரதிதாசன் படைப்புகள் மதிப்பீட்டரங்கு, பெரம்பலூரில் சாரங்கபாணி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
  தமிழ் மொழியையும், இனத்தையும் தம் படைப்புகளில் ஆழமாக பதிவு செய்தவர் பாரதிதாசன். புதுமைகளைப் படைக்க வற்புறுத்தியதோடு, உலக ஒருமைப்பாட்டை மிகுதியாய் வலியுறுத்தினார் பாரதிதாசன். பெண் கல்வியையும், விதவை மறுமணத்தையும் பிடிவாதமாய்த் தூக்கிப்பிடித்தார். இளையத் தலைமுறையினரின் தன்னம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்ந்ததோடு, பகுத்தறிவுச் சிந்தனைகளை அவரது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தினார்.
  கூட்டுத் தொழில் முயற்சி பெரும் நன்மையைத் தருமென்று உறுதியாக நம்பினார். பாரதியை போற்றினார். ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காய்க் குரல் கொடுத்து, திராவிட உணர்வைப் பதியமிட்டார்.
  இயற்கையை அழகின் சிரிப்பாய் ரசித்து, காதல் பாடல்களை ரசம் சொட்டச் சொட்டத் தந்தார். தமிழர் தம் பண்பாட்டையும், பழம்பெருமைகளையும் சொல்லிச் சொல்லி பூரிப்படைந்தார்.
  இவர்தம் மொழி உணர்வும், தமிழின உணர்வும் முதுகெலும்பைச் சில்லிடச் செய்கிறது. புரட்சிக் கவிஞராய் வாழ்ந்த கம்பீரக் கவிஞரின் பாடல் வரிகளை, நாமும் பின்பற்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம் இளையத் தலைமுறையையும், அவர்தம் கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கா. அன்பரசு, பாரதிதாசன் படைப்புகளை மதிப்பீடு செய்து உரையாற்றினார். முன்னதாக, மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  
  தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் மு. முத்துமாறன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள் மலர்கொடி, நடராசன், ஆசிரியர் பயிற்றுநர் பொன்மலர், போட்டித் தேர்வுகள் பயிற்சியாளர் உமாசங்கர், சமூக ஆர்வலர் சாரங்கபாணி, பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை கவிஞர்   தே. தேவன்பு, கவிஞர்கள் சு. அழகுவேல், வே. செந்தில்குமரன், நிரோஷா, பழனிவேல், அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதுகலை மாணவர்கள் ஜான்சிராணி, ரமேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் பல்வேறு இதழ்களை மதிப்பீடு செய்தனர்.
  ஆசிரியர் அ. சுரேஷ்குமார் வரவேற்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai