Enable Javscript for better performance
வேப்பந்தட்டையருகே சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணி வழங்குவதில் பாரபட்சமாக செயல்படும் ஊராட்சி எழுத்தரை கண்டித்து, கிராம பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    வேப்பந்தட்டை அருகே அனுக்கூர் கிராமத்தில் உள்ள 5 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பணி வழங்கும் போது, குறிப்பிட்ட சில வார்டுகளில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே பணி வழங்குவதாகவும், சில வார்டுகளில் உள்ளவர்களுக்கு அதிக நாள்களுக்கு பணி வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
    மேலும், இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறையே ஊதியம் வழங்கப்படுகிறதாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீஸார் அப்பகுதிக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால், அனுக்கூர்- வேப்பந்தட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai