Enable Javscript for better performance
தடகள விளையாட்டு: மார்ச் 6-ல் தேர்வுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    திறன் கண்டறியும் திட்டத்தின் கீழ், தடகள விளையாட்டிற்கான தேர்வுப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மார்ச் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது என மாவட்ட விளையாட்டு அலுவலர் ம. ராமசுப்பிரமணிய ராஜா தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், புதியதாக தொடங்கியுள்ள திறன் அறியும் திட்டத்தின் கீழ் தேர்வாகும் 14 வயதிற்குள்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தடகள பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    இத்திட்டத்தின் கீழ், தலா 10 சிறுவர்கள், சிறுமிகள் என மொத்தம் 20 பேர் தேர்வுசெய்யப்பட்டு, ஆண்டு முழுவதும் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகள பயிற்றுநரால் நாள்தோறும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி மேற்கொள்ள வசதியாக, நாள்தோறும் பயிற்சியின்போது சத்தான உணவு, பயணப்படி மற்றும் சீருடை ஆகியவை வழங்கப்படும்.
    சிறப்பாக விளையாடும் சிறுவர், சிறுமிகள் அடுத்தக்கட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். சாதனை புரியும் சிறுவர், சிறுமிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதி மற்றும் அகாதெமிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    இதற்கான விளையாட்டுத் தேர்வுப்போட்டிகள் மார்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
    மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை மேம்படுத்தி சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் பல பதக்கங்களை வெல்லவும், சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கிலும் பயிற்சியளிக்கப்பட உள்ளது.
    தேர்வுப் போட்டிகளுக்கு சிறுவர், சிறுமிகள் பள்ளிக் கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் வரவேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai