Enable Javscript for better performance
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத அரசுக் கல்லூரி புதிய கட்டடம்!- Dinamani

சுடச்சுட

    

    பணிகள் முடிந்தும் திறக்கப்படாத அரசுக் கல்லூரி புதிய கட்டடம்!

    By DIN  |   Published on : 04th March 2017 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடப் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
    வேப்பந்தட்டையில் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு ரூ. 12 கோடியில் நிர்வாக மற்றும் வகுப்பறை கட்டடங்கள் கட்ட கடந்த 12.6.2015-ல் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அடிக்கல் நாட்டினார்.
    முன்னதாக, 2014- 2015 ஆம் கல்வியாண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளாக வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் இந்த கல்லூரிக்கான வகுப்புகள் மாறிமாறி நடைபெற்று வருகின்றன. இங்கு பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.  இதனிடையே வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி மையம் அருகே இக்கல்லூரிக்கான சொந்தக் கட்டடம் 43,772 சதுர அடி பரப்பில் 3 தளங்களைக் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது. இதில், கல்லூரி முதல்வர் அறை, துறைத் தலைவர் அறைகள் 4, பேராசிரியர் அறைகள் 2, வகுப்பறைகள் 14, அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதிகள், மாணவர் பல்பொருள் அங்காடி, நூலகம், 2 ஆய்வகங்கள், 2 கணினி ஆய்வகம், 1 கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்தக் கட்டடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், தற்போது நடைபெற்று வரும் வகுப்பறைகளில் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகளை ஒரு பெஞ்சுக்கு 3 மாணவர்கள் அமர்ந்து எழுதும் நிலை உள்ளது.  தற்போது, 3 ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல் நடத்தப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கவுள்ளது. ஆனால், கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்பதற்கான இடப்பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. எனவே, புதிய கட்டடத்தை திறப்பதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கை.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai