Enable Javscript for better performance
வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 17 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 234 காளைகள் பங்கேற்றன; காளைகளை அடக்க முயன்ற 17 வீரர்கள் லேசான காயமடைந்தனர்.
    வேப்பந்தட்டை அருகேயுள்ள கள்ளப்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனர்.
    பள்ளப்பட்டி கிராமத்தின் பிரதான பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு, காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு  தொடங்கியது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி, அன்னமங்கலம், அரசலூர், முஹமதுபட்டினம், எசனை, வேப்பந்தட்டை, விசுவக்குடி, சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, கூடமலை, கெங்கவல்லி, மங்கப்பட்டி, திருச்சி மாவட்டம், இருங்களூர், சமயபுரம், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 234 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன.
    இந்த காளைகளை பெரம்பலூர், திருச்சி, சேலம், ஆத்தூர், துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 220 மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வெற்றனர். மேலும், போட்டியில் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டன.
    வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    துணை கண்காணிப்பாளர்கள் கார்த்திக், ஜவகர்லால் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார், தீயணைப்புப் படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai