Enable Javscript for better performance
பாதுகாப்பின்றி சிதிலமடைந்து வரும் முதுமக்கள் தாழி: தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பாதுகாப்பின்றி சிதிலமடைந்து வரும் முதுமக்கள் தாழி: தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 07th March 2017 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகே, இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு, பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் முதுமக்கள் தாழி உள்ள பகுதியை பாதுகாத்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    முதுமக்கள் தாழிக்கு ஈமப்பேழை, மதமதக்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. முதுமக்கள் தாழி அரை அடி முதல் ஏழு அடி வரையிலான பல்வேறு அளவுகளில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சாலை அமைக்கும் பணிக்காக மண் தோண்டியபோது, அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பானை வடிவமைப்பிலான பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. தகவலறிந்த மத்திய தொல்லியல் துறையினர், அப்பகுதிக்கு சென்று அந்த பானை வடிவமைப்பிலான பொருள்களை உடைத்து பார்த்தபோது, உள்ளே மனிதர்களின் எலும்புகளும், மண் பாண்ட தட்டுகள் மற்றும் அகல் விளக்குகள் இருப்பது தெரிய வந்தது.  
    மேலும், பெரிய கற்பலகைகள், உடைந்த முதுமக்கள் தாழிகளின் எச்சங்கள், சிறுவர் இறப்புச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறுதாழி, இறந்த மனிதர்களின் எலும்புகள், உடைந்த சங்கு வளையல்களும் இருந்தன.
    இதையறிந்த இந்திய தொல்லியல் துறையினர், அந்தப் பகுதியை  தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து,
    அப்பகுதியை சுற்றி கம்பி வேலிகள் அமைத்து பல்வேறு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து தகவல் பலகையும் வைத்துள்ளனர்.
    இதை, யாராவது சேதப்படுத்தினாலோ, அகற்றினாலோ சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். மேலும், பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து சின்னத்தை சுற்றியுள்ள பகுதியை தோண்டுதல் மற்றும் கட்டடப் பணிகளுக்காக தடை செய்யப்பட்ட, கட்டுப்பாட்டிற்குள்பட்ட பகுதி என அறிவித்துள்ளனர்.
    ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பாதுகாப்பும், பராமரிப்பும் இன்றி, தற்போது முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்களும், கால்நடைகளும் அந்த இடத்தை சேதப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, சூழலியலாளர் ரமேசு கருப்பையா கூறியது:பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோயில், சமஸ்கான் மசூதி, ரஞ்சன்குடி கோட்டை, காரை முதுமக்கள் தாழி ஆகிய பகுதிகள் தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
    முதுமக்கள் தாழி உள்ள பகுதியை முறையாக ஆய்வு செய்து, அங்கிருந்த கண்டறியப்படும் பொருள்களை கொண்டு அதனுடைய காலத்தை அறிய வேண்டும்.
    மேலும் அப்பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இதன் மூலம், பெரம்பலூர் மாவட்டம் எத்தகைய பழைமை வாய்ந்தது என்பதை தொல்லியல் ஆய்வு மூலம் அறியமுடியும் என்றார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai