Enable Javscript for better performance
வரலாற்றைப் படிக்க வேண்டும்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை அறிந்துகொள்ள வரலாறுகளைப் படிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ்ரோவர் தன்னாட்சிக் கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில் கல்வெட்டுக் கண்காட்சி மற்றும் கல்வெட்டு- தொல்லியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் இல. தியாகராஜனின் பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள், செப்பேடுகள் என்ற நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    நூலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
    நாம் வாழும் வாழ்க்கை வரலாறுகளால் நிரம்பியது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை அறிந்துகொள்ள வரலாறுகளைப் படிக்க வேண்டும். பெரம்பலூருக்கு என்று தனித்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. நான் பணியில் சேர்ந்தபோது 1830 ஆம் ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தோடு இணைந்த பெரம்பலூர் ஆவணங்கள் மட்டுமே கிடைத்தன. அந்தக் குறையை இந்நூல் போக்கியுள்ளது. வரலாற்று ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றார் நந்தகுமார்.  
    முதல் பிரதியை பெற்றுக்கொண்ட தந்தை ரோவர் கல்விக் குழுமங்களின் மேலாண் தலைவர் டாக்டர் கி. வரதராஜன் பேசியது:  
    ஆவணப்படுத்துதல் என்பது சாதாரணமல்ல. நதிக்கரை நாகரிகமே ஒரு பண்பாட்டின் தோற்றுவாய். வரலாற்றில் இடம்பெற்றுள்ள அரண்மனைகளின் கட்டடக் கலைகள் என்றும் போற்றப்பட வேண்டியவை. ராஜராஜச்சோழனது தஞ்சை பெரியகோயில் விமான வடிவமைப்பு அக்கோயிலின் நுண்கலைச் சிறப்பாகும். உலகளவில் ஆவணங்களை பதப்படுத்தியது யூதர்களே. அதனால்தான் யூதர்களை இன்றைய அளவும் சில வல்லரசுகளால் வெற்றிகொள்ள இயலவில்லை என்றார் அவர். நூலாசிரியர் முனைவர் இல. தியாகராஜன் தனது ஏற்புரையில், 1982 ஆம் ஆண்டுகளிலிருந்து சேகரித்த கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய வரலாறு, அதற்கு உதவி புரிந்தவர்கள், கல்வெட்டுகளோடு முதுமக்கள் தாழி, கற்கால மனிதர்களின் பொருள்கள் கிடைத்த செய்திகள், ரஞ்சன்குடிக்கோட்டை வரலாறு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களின் பெயர் மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
    விழாவில் கல்லூரி முதல்வர் வெ. அயோத்தி, அரியலூர் அரசுக் கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன், கங்கைகொண்டசோழபுர மேம்பாட்டுக் குழமத் தலைவர் இரா. கோமகன், அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் து. சேகர், அரியலூர் அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் ப. செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.   ஏற்பாடுகளை, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜெ. ரஞ்சனி, கல்லூரி துணை முதல்வர் அ. மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்த்துறை பேராசிரியர் ம. அகதா வரவேற்றார். பேராசிரியர் இரா. பழனிச்சாமி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai