Enable Javscript for better performance
’கிணறுகளை ஆழப்படுத்த, ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    ’கிணறுகளை ஆழப்படுத்த, ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி அவசியம்

    By DIN  |   Published on : 11th March 2017 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் கிணறுகளை ஆழப்படுத்தவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் முறையான அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையை சமாளித்து, பொதுமக்களுக்கு இடையூறின்றி தேவையான குடிநீர் வழங்க வேண்டியுள்ளது. எனவே, கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆதாரங்களுக்கு 100 மீட்டருக்குள் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மூலமாக புதிய கிணறுகள் தோண்டுதல், ஏற்கெனவே உள்ள கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் ஆகிய பணிகளை தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது.
    மேலும், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மூலம் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் கட்டணமாக ரூ. 5 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதிக்காது என்பதை உறுதிசெய்த பின்னர், விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாள்களுக்குள் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு உரிய அனுமதி ஆணை வழங்கப்படும். வணிக ரீதியான பதிவுச் சான்று பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கட்டணமாக ரூ. 15 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையுடன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 45 நாள்களுக்குள் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய நிபந்தனைகளுக்குள்பட்டு பதிவுச் சான்று வழங்கப்படும்.
    எனவே, பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai