Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் உலர் தீவன கிடங்கு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
    அப்போது அவர் பேசியது: வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதற்காக வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், உலர் தீவன கிடங்குகள் அமைத்து, கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் (வைக்கோல்) வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
    அவரின் வழியில் நடைபெறும் தமிழக அரசு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, குறிப்பாக கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையைப் போக்க நிகழாண்டு ரூ. 90.35 லட்சத்தில் அரியலூர், செந்துறை, பெரியவளையம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் 5 உலர் தீவன கிடங்குகள் திறக்கப்பட்டு, கால்நடைகளுக்கு மானிய விலையில் வைக்கோல் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    இந்த தீவன கிடங்குகள் மூலம் உலர் தீவனம் (வைக்கோல்) கொள்முதல் செய்யப்பட்டு, ஏழை விவசாயிகளுக்கு அரசு மானிய விலையான கிலோ ரூ. 2-க்கு வழங்கப்படவுள்ளது.
    ஒரு மாட்டிற்கு தினசரி 3 கிலோ வைக்கோல் என்ற அடிப்படையில் வாரத்திற்கு 105 கிலோ மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்படும். இதனால், இம்மாவட்டத்தில் 1,57,136 மாடுகள் பயன்பெறும். எனவே, கால்நடை வளர்போர் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் உலர் தீவனக் கிடங்கு அமைந்துள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவமனைகளை அணுகி பயன்பெறலாம் என்றார் அவர். நிகழ்ச்சியில், ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் நசீர், கால்நடை உதவி இயக்குநர் பாஸ்கரன், கால்நடை உதவி மருத்துவர்கள் குமார், சேகர், காளீஸ்வரன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai