Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை: பாமகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிர்சனையைத் தீர்க்க வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியினர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்திசிலை எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்டச் செயலர் செந்தில்குமார் பேசியது:
    பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நாள்தோறும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், நகராட்சி நிர்வாகத்தினர் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    கொள்ளிடம் கூட்டுக் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகளில் குடிநீர் வீணாகிறது. இவற்றைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு செல்கிறது.
    குடிநீர் குழாய்களைச் சீரமைத்து, பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றிக் குடிநீர் வழங்க வேண்டும். மேலும், குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பொதுக்கிணறு, ஆழ்குழாய் கிணறு ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். நகராட்சிப் பகுதியில் சேதமடைந்துள்ள குழாய்களை உடனடியாகச் சீரமைத்து, தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.  
    மாநில துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், தங்கதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் கா. கண்ணபிரான், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கட்சி நிர்வாகிகள் தர்மராஜ், சின்னதுரை, கண்ணன், துரை. தேவராஜன், சத்தியசீலன், ராஜேந்திரன், வழக்குரைஞர் இளங்கோவன், பிரகாஷ், இமயவரம்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    அரியலூரில்... குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி அரியலூர் ஆயிரங்கால் மண்டபம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் க. வைத்திலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பூ.ரெ. கண்ணன்,மாவட்டத் தலைவர் க. திருமாவளவன்,மாநில துணைத் தலைவர்கள் செ. சின்னதுரை,கே.பி.என். கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai