குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் மறியல்
By DIN | Published on : 15th March 2017 06:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரம்பலூர் அருகே கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் வாகனங்கள் மூலமாக குடிநீரை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பெரம்பலூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், வாரத்துக்கு ஒருமுறை வாகனங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரில் உள்ள பொதுமக்களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதாம். அதுவும் குறைந்த நேரத்திலேயே நிறுத்திவிடுவதால் குடிநீர் பற்றாக்குறையால் அப்பகுதியினர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இந்நிலையில், கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் காவல் துறையினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் அங்கு சென்று மறியலில் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் இப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.