Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சாலை மறியல்: அரியலூரில் 175 பேர், பெரம்பலூரில் 105 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சாலை மறியல்: அரியலூரில் 175 பேர், பெரம்பலூரில் 105 பேர் கைது

    By DIN  |   Published on : 18th March 2017 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 175 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அப்போது தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டும். ஊரக வளர்ச்சித் துறையின் அச்சாணியாக விளங்கும் ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். உதவி இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தை மேலும் சிறப்பாக நடத்த வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி அலுவலர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தங்களது போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். அரியலூர் அண்ணாசிலை அருகே சங்கத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிறகு அங்கிருந்து ஊர்வலமாகச் சென்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அரியலூர் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 175 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
    பெரம்பலூரில்... பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் எதிரே, வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த 105 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலர்கள் வரையிலான பதவியில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் எதிரே, மாவட்டத் தலைவர் இ. மரியதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி மற்றும் 25 பெண்கள் உள்பட 105 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai