Enable Javscript for better performance
ஜல்லிக்கட்டு: வேப்பந்தட்டையில் 15 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பூலாம்பாடி கிராமத்தில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
    இதில் 241 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை அடக்க முயன்ற 15 வீரர்கள் காயமடைந்தனர்.
    முன்னதாக, போட்டியில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட காளைகளை கால்நடைத்துறை உதவி இயக்குநர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், மாடுபிடி வீரர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர்.
    பூலாம்பாடி கிராமத்தின் பிரதான பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு, காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில், பெரம்பலூர், சேலம், கரூர், நாமக்கல், மதுரை, அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 348 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், 241 காளைகள் மட்டுமே வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன.
    இந்த காளைகளை பெரம்பலூர், திருச்சி, சேலம், ஆத்தூர், துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 256 மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வெற்றனர். மேலும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
    15 மாடுபிடி வீரர்கள் காயம்: வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற சேலம் மாவட்டம், கடம்பூரை சேர்ந்த ராஜமாணிக்கம் (21), பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (31), உத்தம சோழபுரத்தை சேர்ந்த திவாகர் (22) உள்பட 15 பேர் காயமடைந்தனர்.
    காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    இலுப்பூரில் 34 பேர் காயம்
    விராலிமலை, மார்ச் 19: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 34 பேர் காயமடைந்தனர்.
    கயாம்புஅய்யனார் பாப்பாத்திகருப்பன்னர் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு, இலுப்பூர் அருகேயுள்ள பெரியகருப்பப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு காலை 9 மணிக்கு தொடங்கியது. முன்னதாக மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு தனித்தனியாக பல கட்ட சோதனை நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசல் முன் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. லோகநாதன் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஆட்சியர் சு. கணேஷ் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தனர்.இதில், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 444 காளைகள் பதிவு செய்யப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அவர்களுக்கு தங்கம், வெள்ளி, சில்வர் பாத்திரம் மற்றும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai