Enable Javscript for better performance
மந்திரவாதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மந்திரவாதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 21st March 2017 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே வீட்டில் பெண் சடலத்தை வைத்து அகோரி பூஜை நடத்திய மந்திரவாதி கார்த்திகேயனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே எம்.எம். நகரில் உள்ள வீட்டில் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியினர் கடந்த 10ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
    அங்கு சென்ற போலீஸார் மரப்பெட்டியில் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலம், 20-க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள், தகடுகள், மாந்திரீக புத்தகங்கள், மை டப்பாக்கள், 40 -க்கும் மேற்பட்ட கடல் குதிரைகள், காளி, விநாயகர் சிலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    இதையடுத்து, மந்திரவாதி எஸ். கார்த்திகேயன், அவரது மனைவி நஷிமா, வினோத் குமார், மயான ஊழியர்கள் தன்ராஜ், கார்த்திக், கார் ஓட்டுநர் சதீஸ் ஆகியோரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட கடல் குதிரைகளை வனத்துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். கடந்த 17.4.2016-ல் பெரம்பலூர் அருகேயுள்ள மருதடியில் குடில் அமைத்து மண்டை ஓடு, எலும்புக்கூடு, காளி பூஜை செய்துவந்த கார்த்திகேயனை, போலீஸார் கைது செய்து குடிலுக்கு சீல் வைத்தனர். இந்த வழக்கில் மந்திரவாதி கார்த்திகேயன், ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
    இந்நிலையில், பெண் சடலத்தை வைத்து அகோரி பூஜை நடத்தியதால் கார்த்திகேயனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    இந்நிலையில், மருதடி கிராமத்தில் உள்ள மந்திரவாதியின் குடில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:
    கார்த்திகேயன் பயன்படுத்திய ரூ. 12 லட்சம் மதிப்பிலான கார், 20-க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள், எலும்பு துகள்கள், மந்திர தகடுகள், மாந்திரீகம் தொடர்பான புத்தகங்கள், வசிய மை டப்பாக்கள், 40-க்கும் மேற்பட்ட கடல் குதிரைகள், காளி, விநாயகர், லிங்கம் ஆகிய சிலைகள் மற்றும் சடலம் வைத்திருந்த சவபெட்டி ஆகியவற்றை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்னிலையில், காவல் துறையினர் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai