Enable Javscript for better performance
பெண்களை கொல்ல முயன்ற இருவருக்கு 7 ஆண்டு சிறை:ஒருவருக்கு 3 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    பெண்களை கொல்ல முயன்ற இருவருக்கு 7 ஆண்டு சிறை: ஒருவருக்கு 3 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 25th March 2017 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, 3 பெண்களை தாக்கி கொலை செய்ய முயன்ற இருவருக்கு 7 ஆண்டுகளும், ஒருவருக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
    பாடாலூர் அருகேயுள்ள சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி மல்லிகா (43). இவரது தாய் சிவஞானம் (65), உறவினர் ஆர்த்தி (24). அதே பகுதியில் கருணாநிதி (57), இவரது மனைவி காளியம்மாள் (52), மகன் தங்கமணி (36) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த 2 குடும்பத்தினருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
    இந்நிலையில், கடந்த 27.2.2011-ல் சாலையில் நடந்து சென்ற சிவஞானத்தின் மீது தங்கமணியின் சைக்கிள் மோதியதாம்.
    இதனால் ஏற்பட்ட தகராறில் சிவஞானம், மல்லிகா, ஆர்த்தி ஆகியோரை, தங்கமணி குடும்பத்தைச் சேர்ந்த கருணாநிதி, காளியம்மாள் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனராம். இதில், மல்லிகா உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
    வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த், தங்கமணிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம், கருணாநிதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம், காளியம்மாளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து, அபராதத் தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக தலா ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளித்தார்.
    மேலும், இந்த வழக்கின் புகார்தாரர்களான மல்லிகா, சிவஞானம், ஆர்த்தி ஆகியோர் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர நீதிபதி விஜயகாந்த் பரிந்துரை செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai