Enable Javscript for better performance
"முதியோர் வாழ்க்கை அனுபவங்களை இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "முதியோர் வாழ்க்கை அனுபவங்களை இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும்'

    By DIN  |   Published on : 25th March 2017 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதியோர் தங்களது வாழ்க்கை அனுபவங்களை இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு.
    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், சமூகநலத் துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதியோர் தின விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
    இயற்கையின் விதிப்படி அனைவரும் முதுமைப் பருவத்தை கடந்துசெல்ல வேண்டும் என்பது நியதியாகும்.
    வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை கடந்து முதுமைப் பருவத்துக்கு வந்திருக்கும் முதியோர், தங்களது வாழ்க்கையில் பல்வேறு வகையான அனுபவங்களை பெற்றிருப்பீர்கள். எதிர்கால இந்தியாவின் தூண்களான இன்றைய இளைய சமுதாயத்திற்கு உங்களது வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தர வேண்டும்.  
    மேலும், முதியோரை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஆதரவற்ற முதியோரின் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில், முதியோர் உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.  
    வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய மணையியல் தொழில்நுட்ப வல்லுநர் விஜயலட்சுமி, முதியோர் மேற்கொள்ள வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து விளக்கினார்.
    நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியோரிடையே கதை சொல்லுதல், பாட்டுப்பாடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு பரிசுகளை வழங்கினார்.  
    இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலரும், மாவட்ட சமூக நல அலுவலருமான (பொ) முத்துமீனாள், அரசு தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் தணிகாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai