Enable Javscript for better performance
சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணம் தடுக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணம் தடுக்கப்படுமா?

    By DIN  |   Published on : 27th March 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    அதிக கிராமங்களை உள்ளடக்கிய பெரம்பலூர் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பெரம்பலூருக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கான பேருந்து வசதியை அரசுப் போக்குவரத்துக்கழகம் முழுமையாக ஏற்படுத்தி தரவில்லை.
    இந்நிலையில், நகரில் இயக்கப்படும் 450-க்கும் மேற்பட்ட 3 ப்ளஸ் 1 ஆட்டோக்கள், 40-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் உள்பட பல்வேறு வகையான பயணியர் வாகனங்கள் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு உரிய நேரத்திற்கு சென்று வருகின்றனர். இங்குள்ள ஆட்டோக்கள் பெரம்பலூர் மட்டுமன்றி, நகரைச் சுற்றியுள்ள சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மலையாளப்பட்டி, சின்னமுட்லு, பில்லங்குளம்,  கோவில்பாளையம், கிளியப்பட்டு, சில்லக்குடி, மேத்தால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் போதிய பேருந்து வசதியின்றி, கூட்ட நெரிசலில் சிக்கி, படிகளில் தொங்கியபடி பயணக்கின்றனர்.
    இதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் திருமண நிகழ்ச்சி, கோயில் திருவிழாக்கள் மற்றும் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று வர லாரி, டெம்போ, சுமை ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களையே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
    இதுபோன்று பயணம் செய்யும்போது, சரக்கு வாகனங்கள் ஆள்களை ஏற்றிச்செல்ல உகந்ததாக இல்லை என்பதை அறிந்தும், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் தொடர்ந்து சரக்கு வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
    இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த விபத்துகள் மூலம் பொருள் சேதமும், சில நேரங்களில் உயிர்ச் சேதமும் ஏற்பட்டு வருவது வேதனைக்குரியதாகும். பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரை, சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வதைத் தடுக்க வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஒருசில நேரங்களில் ஆள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பிடித்தாலும், அதன் உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது அல்லது அதற்கான அபராதத்தை வசூலித்துக்கொண்டு அவர்களை விடுவித்து விடுகின்றனர்.
    இதனால், பெரம்பலூர் நகர் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆபத்தான பயணம் என அறிந்தும் கிராமப்புற மக்கள் தொடர்ந்து சரக்கு வாகனங்களிலேயே பயணம் செய்கின்றனர். எனவே, இதுபோல பயணிப்பதால் தொடர்ந்து நிகழும் ஆபத்தை மக்களுக்கு உணர்த்துவதோடு, கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.
    மேலும், சரக்கு வாகனப் பயணத்தை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai