"வங்கிகளின் கடன் இலக்கு ரூ. 3,600 கோடி': பெரம்பலூர் ஆட்சியர்
By DIN | Published on : 28th March 2017 06:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
2017-18 ஆம் ஆண்டுக்கான கடன் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஆட்சியர் க. நந்தகுமார்.
வங்கியாளர்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர், வங்கிகளின் 17-18 ஆம் நிதியாண்டின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகளுக்கு ரூ. 3,600 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த ஆண்டை விட ரூ. 500 கோடி கூடுதலாகும். இதில், விவசாயத்துக்கு 73 சதவீதமும்(ரூ. 2,328 கோடி), விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 8 சதவீதமும்(ரூ. 288 கோடி) இதர முன்னுரிமை கடன்களுக்கு 19 சதவீதமும்(ரூ. 684 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வங்கியாளர்கள், அரசுத் துறைகளுடன் இணைந்து கடன் இலக்கை அடைந்து மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி காண வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் நா. முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பா. அருள்தாசன், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பிரதிநிதி தியாகராஜன், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் நவின்குமார் உள்பட பல்வேறு வங்கிகளை சேர்ந்த மேலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.