Enable Javscript for better performance
விவசாயக் கடன் ரத்து கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் சமூக நீதிப்பேரவை சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. மனோகரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
    ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்துக்குத் தேவையான வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். விளை நிலங்களைப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி வாரணம் கிடைக்க வேண்டும். விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாகச் சென்ற பேரணி ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் அளித்தனர். பேரணியில் பங்கேற்றோர் அரை நிர்வாணமாக, மண்டை ஓடுகளை ஏந்தி முழக்கமிட்டனர். மக்கள் சமூக நீதிப்பேரவை மாநில நிர்வாகிகள் புஷ்பராஜ், சுமதி, தியாகராஜன், ராஜா, மணிமேகலை, நல்லதம்பி, பாலு,கோவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai