பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், இரூரில் உள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. இங்கு போதிய வசயின்மையால், புதிதாக வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம், சேமிப்புக் கிடங்கு ஆகியவை அமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், விதை சேமிப்புக் கிடங்கு கட்டுவதற்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதியின் மூலம் ஆலத்தூர்- செட்டிக்குளம் சாலையில் புதிதாக வேளாண்மை விரிவாக்க மையம், விதை சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண்மை வணிகம் மற்றும் விதைச் சான்றுத்துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளது. வேளாண்மை பொறியியல் துறையினரால் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில், புதிய கட்டடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சமூக விரோத செயல்கள் நடப்பதாக விவவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை திறந்து விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவிக்கை எடுக்க வேண்டுமென ஆலத்தூர் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.