துறைமங்கலம் கே.கே. நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலம் கே.கே.நகர் முதல் குறுக்குத் தெருவில் உள்ள இந்தக் கோயிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கிறார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோயில் வளாகத்திலிருந்து பிரதான வீதிகள் வழியாக பால்குடங்களுடன் சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தனர். மேலும், அலங்கரிக்கப்பட்ட அம்மனின் திருவீதி உலாவும் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.