பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் புதிதாக கணக்கு தொடங்கி பயிர்க்கடன் பெற வேண்டிய நடைமுறையால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதுவரையில், எந்த கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டு விண்ணப்பித்தனரோ அந்தந்த வங்கிகளிலேயே எளிதாக கடன் பெற்று வந்தனர். ஆனால், நிகழாண்டு வேப்பந்தட்டை பகுதிகளில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளில் இருந்தும் கடன் தொகையை மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வைப்பதோடு, அந்த வங்கியில் விவசாயிகள் விண்ணப்பித்து கடன்பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதாவது, வேப்பந்தட்டையில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வேப்பந்தட்டை, நெய்குப்பை, வெண்பாவூர், நூத்தப்பூர், நெற்குணம், சிறுநிலா, வெங்கனூர், கிருஷ்ணாபுரம், தொண்டமாந்துறை, அன்னமங்கலம், அரும்பாவூர், பூலாம்பாடி, கடம்பூர், வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் ஆகிய 14 கூட்டுறவு வங்கி கிளைகளில் இருந்தும் விவசாயக்கடன் தொகை அனுப்பி வைக்கப்படும். இந்த 14 வங்கி கிளைகளில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வேப்பந்தட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் புதிதாக வங்கி கணக்கு தொடங்கி தங்களது பயிர்க் கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் அட்டை மற்றும் வருமான வரி கணக்கு எண் (பான் கார்டு) அவசியம் என வற்புறுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். விவசாயிகளை அலைக்கழிக்காமல் அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலேயே தங்களது பயிர்க் கடனை எளிதாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேப்பந்தட்டை வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.