பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் நாட்டு சர்க்கரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொளக்காநத்தம் ஊராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில், தனி அலுவலர் வெங்கடேஸ்வரன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வெள்ளை சர்க்கரையின் தீமைகள், நாட்டுச் சர்க்கரையால் விளையும் நன்மைகள் மற்றும் விவசாயிகளுக்கு கிடைக்கும் உடனடி பலன் குறித்து கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகர் மு. ராஜா பொதுமக்களிடம் விவரித்தார். இதையடுத்து அந்த தீர்மானத்தை நிறைவேற்ற பொதுமக்கள் சம்மதித்தனர்.
கூட்டத்தில், ஊராட்சி எழுத்தர் சீ. ராம்குமார், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ந. ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.