Enable Javscript for better performance
சாலையில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீர்: பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

    By DIN  |   Published on : 09th February 2018 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் புகர் பேருந்து நிலையம் அருகே புதை சாக்கடைத் திட்ட கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
    பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட அரணாரை, துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 21 வார்டுகளில் புதை சாக்கடை திட்டம் கடந்த 7.5.2012-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 3,200 ஆள் இறங்கும் தொட்டிகள் மற்றும் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டன.
    இதுவரை சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதை சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத் திட்டத்தின் கீழ், நகரின் பிரதான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆள் இறங்கும் தொட்டிகள் மீது கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி உடைந்து, அவை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
    குறிப்பாக, விரிவாக்கப் பகுதிகளில் புதை சாக்கடை திட்டப் பணியின்போது தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூடாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகிறது.
    இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலான மழை பெய்தது. குறிப்பாக, பெரம்பலூர் நகரில் பெய்த பலத்த மழையால் சாலையோரங்களிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் மழைநீர் பெருக்கெடுத்தோடியது. இதில், புகர் பேருந்து நிலைய வளாகம் அருகே உள்ள புதை சாக்கடைத் திட்ட ஆள் இறங்கும் குழிக்குள் மழைநீர் சென்றதால் கழிவு
    நீருடன், கழிப்பறை கழிவுகளும் வெறியேறி சாலையில் வழிந்தோடியது. அதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களும், பாதசாரிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மேலும், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
    கழிவுநீரை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களின் கோரிக்கை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai