Enable Javscript for better performance
செட்டிக்குளத்தில் பங்குனி உத்திர தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    புகழ்பெற்ற தண்டாயுதபாணி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா மார்ச் 21 ஆம் மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, 22 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 
    தொடர்ந்து, நாள்தோறும் காலை 10 மணிக்கு மலையில் உள்ள உற்சவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரதங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 
    7 ஆம் திருவிழாவான மார்ச் 28 ஆம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், 29 ஆம் தேதி சிவன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது. 
    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4.40-க்கு தொடங்கியது. வள்ளி, தெய்வானையும் திருத்தேரில் எழுந்தருளிய தண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
    விழாவில், திருச்சி, துறையூர், அரியலூர் பெரம்பலூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    விழாவையொட்டி, பெரம்பலூர், துறையூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சனிக்கிழமை (மார்ச் 31) மாலை திருத்தேர் நிலைக்கு வந்தடைகிறது.   
    விழாவுக்கான ஏற்பாடுகளை, திருக்கோயில் செயல் அலுவலர் ம. யுவராஜூ, தக்கார் கே. பாரதிராஜா தலைமையிலான கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். 
    பெரம்பலூரில்... பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 38-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    கடந்த 23 ஆம் தேதி அனுக்கை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. கடந்த 28 ஆம் தேதி  பாலமுருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை ஐயப்பன் கோயிலில் இருந்து காவடி புறப்பாடு நடைபெற்றது. பின்னர், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாலை 4 மணிக்கு சப்பரத் தேரோட்டம் நடைபெற்றது. பிரதான வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேர் கோயில் வளாகத்தை இரவு வந்தடைந்தது.  திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai