அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோரி  28 ஆண்டுகளாகக் காத்திருக்கும் மக்கள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரி 28 ஆண்டுகளாக தொடர் முயற்சிகள் மேற்கொண்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
10.7.1990-இல் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோதே, கீழப்பெரம்பலூரில் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, அப்போதைய லப்பைக்குடிகாடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரால், முறையான ஆவணங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டன. கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து, கீழப்பெரம்பலூர் ஊராட்சி நிர்வாகமும் தீர்மானம் நிறைவேற்றியது.  இதற்கான பங்களிப்பாக ரூ. 10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நிதி பொதுமக்கள் சார்பில் 22.8.1996 -இல் அரசுக்கு செலுத்தப்பட்டது. ஆனால், ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்காமல் தள்ளிப்போனது. ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறத்து, கீழப்பெரம்பலூரைச் சேர்ந்த இளமுருகன் கூறியது: இங்கிருந்து 13 கி.மீ தொலைவு பயணித்தே லப்பைக்குடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று வருகிறோம். இந்தத் தொலைவைக் கடக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவசர சிகிச்சை தேவைப்படும் பலர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர். எங்கள் பிரச்னையை அரசு அதிகாரிகளும், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்த, குறைவான தொலைவு இடைவெளி உள்ள கிராமங்களில் கூட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால், அரசு நிர்ணயித்துள்ள தகுதிகள் பல இருந்தும் கீழப்பெரம்பலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதி கிராம மக்களின் நலனை தமிழக அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com