காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம், பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம், பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் டி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி மூக்கன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஸ்ரீவெல்லபிரசாத் பேசியது: 
தற்போது நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சி அரசின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் மத்திய அரசின் ஊழல்கள் குறித்து வீடுதோறும் காங்கிரஸ் கட்சியினர் திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற மக்கள் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், நாட்டின் பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன்மூலம், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கச்செய்ய கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள், மோடி அரசை அகற்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார். இதற்காக, கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் அவர். 
தொடர்ந்து, மக்களவை தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், தேர்தலில் பணியாற்றுவது, காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வது, காங்கிரஸ் கட்சியின் திட்டப் பணிகளை பொதுமக்களிடையே கொண்டுசெல்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 
கூட்டத்தில், மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, மாநில பொதுச்செயலர் ராஜேந்திரன், வட்டாரத் தலைவர்கள் சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், ரெங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
பெரம்பலூர் தொகுதி தலைவர் செந்தில் பிரசாந்த் வரவேற்றார். வழக்குரைஞர் பிரிவு மாவட்டத் தலைவர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com