பெரம்பலூர் ஆட்சியரத்தில் முற்றுகை, தர்னா

பாதை பிரச்னை சம்பந்தமாக மனு அளிக்க வந்த பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதி அளிக்காத

பாதை பிரச்னை சம்பந்தமாக மனு அளிக்க வந்த பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதி அளிக்காத பெரம்பலூர் காவல் ஆய்வாளரைக் கண்டித்து, ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட பாடாலூரை சேர்ந்த ஒரு பிரிவினர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சதுர்த்தியின்போது, விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்தி வந்தனராம். இந்நிலையில், சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் மறுப்பு தெரிவித்தனராம்.
இதுதொடர்பாக, ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு இரு பிரிவினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார், ஒரு பிரிவைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் சிலரைத் தாக்கினாராம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிப்பதற்காக சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். 
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான போலீஸார் ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல அனுமதி மறுத்ததால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆய்வாளரின் செயலைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது, ஆட்சியரின் கார் அலுவலகத்துக்கு வந்ததையறிந்த பொதுமக்கள் காரை நோக்கிச் சென்றனர். இதையறிந்த மாவட்ட ஆட்சியர் சாந்தா, பொதுமக்களை சந்திக்க மறுத்து மாற்றுப்பாதையில் சென்றுவிட்டார். பின்னர், போலீஸாரின் தடுப்பை மீறிய பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று மனு அளிக்க முயற்சித்தனர். இதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்ததால், ஆட்சியரின் கார் நிறுத்துமிடத்தில் பொதுமக்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நீண்ட போராட்டத்துக்கு பிறகு 6 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) எஸ். சேதுராமனை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், வருவாய் கோட்டாட்சியரகம் சென்று மனு அளிக்க அறிவுறுத்தினார்.  
பின்னர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நேரம் இல்லை. மேலும், போலீஸார் அறிவுறுத்திய வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல வேண்டும். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாராம் கோட்டாட்சியர் விஸ்வநாதன். இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்துசென்றனர். பாதை பிரச்னைக்காக, பொதுமக்களின் அடுத்தடுத்த போராட்டங்களால் மாவட்ட ஆட்சியரிகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com