மாணவர்கள், பொதுமக்களை கவரும் அரசுப் பள்ளி சுவரோவியம்!

பெரம்பலூர் அருகே அரசுப் பள்ளி சுவரில் வரையப்பட்டுள்ள ரயில் ஓவியம் மாணவர்களையும், பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. 


பெரம்பலூர் அருகே அரசுப் பள்ளி சுவரில் வரையப்பட்டுள்ள ரயில் ஓவியம் மாணவர்களையும், பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. 
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மானிய தொடக்கப்பள்ளியை கடந்த 1949 ஆம் ஆண்டு  கக்கன் திறந்து வைத்தார். தமிழக அளவில் ஆதிதிராவிடர் மக்களால் நடத்தப்படும் ஒரே பள்ளி என்னும் பெயரையும்  இப்பள்ளி பெற்றுள்ளது.   
இங்கு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக ரேணுகா, இடைநிலை ஆசிரியர்கள் 5 பேர் பணிபுரிகின்றனர். 
இந்நிலையில், இப்பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருள்கள் வழங்கிட சிறுவாச்சூர் ஆதிதிராவிடர் மக்கள் முடிவெடுத்து, அதற்கான நிதி திரட்டும் பணியை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கினர். ஆதிதிராவிடர் மக்கள்,  முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களிடம் இருந்து சுமார் ரூ. 1.25 லட்சம் வசூலிக்கப்பட்டது. 
இதையடுத்து ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் பழுதடைந்த ஜன்னல், கதவுகள், மராமத்து பணிகளை மேற்கொண்டு, விளையாட்டு மைதானத்தைச் சீரமைத்தனர். மேலும், பள்ளி வகுப்பறைகளுக்கு மின்சாதன வசதிகளையும் மேம்படுத்தினர்.  
இதனிடையே, பள்ளிக் கட்டடம் வண்ணம் தீட்டாமல் காணப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் மாணவர்களைக் கவரும் வகையில் வண்ணம் தீட்ட முடிவெடுத்து, ரூ. 1 லட்சத்தில் பள்ளியின் சுவருக்கு ரயிலை போல வண்ணம் தீட்டினர். இதில், ரயில் பெட்டிகள், வாசல்கள், படிக்கட்டுகளை போல் வண்ணம் தீட்டப்பட்டது. மேலும், பள்ளி வளாக சுற்றுச்சுவருக்கு பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டி, சிறுவர்களை கவரும் வகையில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் வரையப்பட்டுள்ளன. 
சாலையோரம், ரயில் நிற்பதைப் போல மிகவும் தத்ரூபமாக காட்சியளிப்பது அந்த வழியாக செல்லும் பொதுமக்களையும், மாணவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதைக் காணும் பொதுமக்களும், இளைஞர்களும் பள்ளி சுவரில் வரையப்பட்டுள்ள ரயில் தோற்றத்தின் முன்பு நின்று செல்பி எடுத்துச் செல்கின்றனர். 
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில், கிராம மக்கள் சார்பில் வரைந்துள்ள இந்த ஓவியம் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com