Enable Javscript for better performance
மும்முனை போட்டியில் தஞ்சாவூர் தொகுதி- Dinamani

சுடச்சுட

  
  tanjai


  மாநகரமும்,  கிராமங்களும் கலந்த தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய உலகப் புகழ் வாய்ந்த பெருவுடையார் கோயில் (பெரிய கோயில்), சரஸ்வதி மகால் நூலகம், அரண்மனை, தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை உள்ளன.
  இந்தத் தொகுதி தஞ்சாவூர் வட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்டது. இதில், தஞ்சாவூர் மாநகராட்சியும், வல்லம் பேரூராட்சியும் இடம்பெற்றுள்ளன. புதுப்பட்டினம், ராவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேல சித்தர்காடு, புன்னைநல்லூர், புளியன்தோப்பு, பிள்ளையார்பட்டி, நீலகிரி, நாஞ்சிக்கோட்டை ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது இத்தொகுதி.
  கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாகக் கொண்ட இத்தொகுதியில் ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் கணிசமான அளவில் உள்ளனர்.
  இத்தொகுதியில் 1962 ஆம் ஆண்டில் மறைந்த முதல்வர் மு. கருணாநிதி போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினரானார். மேலும், அமைச்சர்களாக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம், சி.நா.மீ. உபயதுல்லா இத்தொகுதியில் வெற்றி பெற்றவர்களே.
  மேலும், 2016 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது பணம் பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, ஏறத்தாழ 6 மாதங்களுக்குப் பிறகு (2016, நவம்பர்) நடத்தப்பட்டது. அப்போது அதிமுகவில் இருந்த எம். ரெங்கசாமி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், 2017 ஆம் ஆண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ரெங்கசாமியும் ஒருவர் என்பதால், இத்தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியைப் பொருத்தவரை 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் இரண்டாவது இடைத்தேர்தல் இது. 
  இத்தொகுதி இதுவரை இரு இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 16 சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 8 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
  பிரச்னைகள்:
  மாநகரில் சிறு வணிகம் பரவலாக இருந்தாலும், கிராமங்களில் வேளாண் தொழிலே முதன்மையாக இருக்கிறது. விரிவாக்கப் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், சுற்றுப்புற கிராமங்களின் வேளாண்மையை நம்பியே மாநகர வர்த்தகம் உள்ளது. எனவே, குறுவை, சம்பா சாகுபடி வெற்றிகரமாக இருந்தால் மட்டுமே மாநகரில் உள்ள கடைவீதிகளிலும் கூட்டம் இருக்கும். 
  ஆனால், காவிரி பிரச்னை காரணமாக சில ஆண்டுகளாக விவசாயம் மட்டுமல்லாமல், வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில், சுற்றியுள்ள கிராமங்களில் வேளாண் சார்ந்த தொழில்கள் இல்லை. குறிப்பாக, மதிப்புக் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு போன்றவை இல்லாதது இந்தத் தொகுதியின் மிகப் பெரிய குறையாக இருக்கின்றன. 
  தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே ஜபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கு கோடைகாலத்தில் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. இதனால், அப்பகுதி மட்டுமல்லாமல், சுற்றுப்புறப் பகுதி மக்களும் புகை மூட்டத்தால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த பிரச்னை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. மாநகரில் 51 குளங்கள் இருந்தாலும், அவற்றுக்கான நீர் ஆதாரத்துக்கு வழி இல்லாததால், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதனால், கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
  இப்போது, பொலிவுறு நகரத் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தால், அகழியையொட்டி கீழ அலங்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. 
  இதனால், வீடுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதேபோல, பொலிவுறு நகரத் திட்டத்தில் பழைய பேருந்து நிலையம், காமராஜர் சந்தை, சரபோஜி சந்தை மற்றும் மாநகராட்சி வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்படவுள்ளன. இதனால், வியாபாரிகள் கடைகளை இழக்கும் நிலையில் உள்ளதால், தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
  வேட்பாளர்கள்:
  திமுக சார்பில் அக்கட்சியின் மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம் களமிறக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை இவர் அறிமுக வேட்பாளர். இவர் ஏற்கெனவே, மாமன்றத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். அதிமுகவில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கத்தின் உதவியாளரும், அதிமுக மாணவரணி தெற்கு மாவட்டச் செயலருமான ஆர். காந்தி போட்டியிடுகிறார். இவரும் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அறிமுக வேட்பாளராகக் களம் காண்கிறார்.
  அமமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எம். ரெங்கசாமி நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார். முன்பு அதிமுகவில் இருந்த இவர் 2006 ஆம் ஆண்டில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர். தற்போது அமமுகவில் உள்ள இவர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
  மக்கள் நீதி மய்யம் சார்பில் பூ. துரைசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் மோ. கார்த்தி உள்பட மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர். 
  யாருக்கு வாய்ப்பு?:
  மறைந்த முதல்வர் மு. கருணாநிதி இத்தொகுதியில் 1962 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றதிலிருந்து, இது திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியை அதிமுக கைப்பற்றியது. 
  தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி, மக்களவைத் தொகுதி எனப் படிப்படியாக திமுக இழந்தது. அவற்றையெல்லாம் கைப்பற்றிய அதிமுக, 2016 ஆம் ஆண்டு தேர்தலிலும் இத்தொகுதியைத் தக்க வைத்தது.  இப்போது, அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ளதால், அக்கட்சியின் வாக்கு வங்கி சிதறும் நிலை உள்ளது. 
  இதைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் திமுக உள்ளது. மேலும், 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை திமுகவுக்கு உள்ளது. எனவே, இத்தொகுதியின் வெற்றியையும் திமுக முக்கியமானதாகக் கருதுவதால், அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
  இதேபோல, அதிமுக அரசு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இத்தொகுதியின் வெற்றியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்நோக்கியுள்ளது. மொத்தம் 22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் குறைந்தது 4 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. 
  எனவே, இத்தொகுதியில் அதிமுகவினர் முழுவீச்சில் வாக்கு சேகரித்து வருகின்றனர். வலுவான கட்டமைப்புக் கொண்ட தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று என்ற நம்பிக்கையில் அமமுக உள்ளது. 
  எனவே, இத்தொகுதியைக் கைப்பற்றுவதில் அமமுகவினரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.  வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில் இருந்தாலும், வெற்றி யாருக்கு என்பது இன்னும் உறுதி செய்யப்பட முடியாத நிலையே தொடர்கிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai