பெரம்பலூரில் துணை ராணுவத்தினர், போலீஸார் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல் துறையினர், துணை ராணுவத்தினர் பங்கேற்ற கொடி
 அணிவகுப்பு நிகழ்ச்சி பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய கொடி அணி வகுப்பை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தொடக்கி வைத்தார். 
இதில், கமாண்டோ விஜயபிரகாஷ் தலைமையில் கம்பெனிக்கு தலா 85 வீரர்கள் வீதம் 3 கம்பெனி துணை ராணுவத்தினர், உள்ளூர் காவல் துறையினர் 100 பேர், சிறப்புக் காவல் படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினர் 500 பேர் என சுமார் 850 பேர் பங்கேற்றனர். பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று மேற்கு வானொலி திடலில் நிறைவடைந்தது. 
பேரணியில், கூடுதல் துணை கண்காணிப்பாளர் ரெங்கராஜன், துணை கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், தேவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரியலூரில் சீருடை காவலர்கள் அணிவகுப்பு: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரியலூர் நகரில் சீருடை காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள், கிராமங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குப் பதிவை செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தொடக்கி வைத்தார். மார்க்கெட், கடைவீதி, அரியலூர்-பெரம்பலூர்  சாலை, திருச்சி சாலை  வழியாகச் சென்று பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அணிவகுப்பு நிறைவடைந்தது.
இதில், துணை ராணுவப் படையினர், அரியலூர், கயர்லாபாத் காவல் நிலையை ஆய்வாளர்கள்,  உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கீழப்பழுவூர் மற்றும் திருமானூரில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜயங்கொண்டம்: ஜயங்கொண்டம் அருகே உள்ளஆண்டிமடம் பகுதி பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் முக்கிய வீதிகள் வழியாக நடத்திய அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவை  தேர்தலை முன்னிட்டு ஆண்டிமடம் பகுதி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கிவைத்துப் பேசினார். இதில், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆண்டிமடம் பகுதியில் 117 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் நாகம்பந்தல், பெரியகிருஷ்ணாபுரம், சிலம்பூர், அழகாபுரம், விளந்தை (மேற்கு, கிழக்கு) ஆகிய 6 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 இவற்றில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வண்ணம் இந்தோ - திபெத் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், திருச்சி முதல் பட்டாளியன்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்ட போலீஸார், துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனால் அச்சமின்றி பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெறுகிறது என்றார். 
ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆண்டிமடம் காவல் நிலையத்தில் முடிவடைந்தது. அணிவகுப்பில் ஜயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி, ஆண்டிமடம் காவல் ஆய்வாளர்கள் ஜெகதீசன், மீன்சுருட்டி மலைசாமி, உதவி காவல் ஆய்வாளர்கள் பிரகஸ்பதி, சற்குனம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com