பெரம்பலூர், அரியலூரில் ஓய்ந்தது பிரசாரம்

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிக் கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. 


பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிக் கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. 
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர். பாரிவேந்தர், அதிமுக சார்பில் என்.ஆர். சிவபதி, அமமுக சார்பில் எம். ராஜசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இரா. முத்துலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் உள்பட 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டவுடன் பிரதான கட்சி வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்கினர். 
திமுக வேட்பாளரை ஆதரித்து, பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, நடிகர் சந்திரசேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி. விரமணி, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். 
அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரும், அமமுக வேட்பாளர் எம். ராஜசேகரனை ஆதரித்து நடிகை சி.ஆர். சரஸ்வதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இரா. முத்துலட்சுமியை ஆதரித்து மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். 
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை, பிரதான கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் பெரம்பலூரில் குறைந்தே காணப்பட்டது. ஆனால், இத்தொகுதிக்குள்பட்ட லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளிலேயே பிரசாரம் அதிகளவில் காணப்பட்டது.
குறிப்பாக, சுயேட்சை வேட்பாளர்களை பொருத்தவரை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது பெரம்பலூர் வந்திருந்த அவர்கள், ஒருமுறை கூட பிரசாரத்துக்கு வரவில்லை. அதிமுக, திமுக, அமமுக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இடங்களில் அவ்வப்போது பிரசாரத்தை மேற்கொண்டனர். 
இதர நாள்களில் அந்தந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
இறுதிக்கட்ட பிரசார தினமான செவ்வாய்க்கிழமை காலை திமுக வேட்பாளர் டி.ஆர். பாரிவேந்தரை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெரம்பலூரிலும், அமமுக வேட்பாளரை ஆதரித்து அக் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கார்த்திகேயன் தலைமையில் நகராட்சிக்குள்பட்ட 9, 10-வது வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இரா. முத்துலட்சுமி, வேப்பந்தட்டை வட்டாரத்திலும் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டனர். 
இறுதி கட்ட பிரசார நாளான செவ்வாய்க்கிழமை பிரதான கட்சி வேட்பாளர்களும் பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொள்வார்கள் என காத்திருந்த நிலையில், கட்சி தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில், அரசியல் கட்சிகளின் தீவிர தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மக்களவைத் தேர்தலுக்கான உச்சக் கட்ட பிரசாரம் நடந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு, களத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர். நகரில் எங்கு பார்த்தாலும் ஒலிப்பெருக்கிகளின் ஓசை, காதுகளைக் கிழித்தன.கடந்த 1 மாதமாக நடைபெற்று வந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
அதிமுக வேட்பாளர் பொ. சந்திரசேகர் காட்டுமன்னார்கோவிலிலும், திமுக கூட்டணி வேட்பாளரும், விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் ஜயங்கொண்டத்திலும், அமமுக வேட்பாளர் தா. பழூரிலும், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டி. ரவி சிதம்பரத்திலும் தங்களது பிரசாரத்தை முடித்துக் கொண்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.சிவஜோதி,தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் சு. பார்வதி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது பிரசாரத்தை முடித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com