13.91 லட்சம் பேர் வாக்களிக்க 1,644 வாக்குச் சாவடிகள் தயார்

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 13,91,011 வாக்காளர்கள் வாக்களிக்க, 1,644 வாக்குச் சாவடி மையங்கள் தயார் நிலையில்

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 13,91,011 வாக்காளர்கள் வாக்களிக்க, 1,644 வாக்குச் சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா. 
பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை  அவர் மேலும் கூறியது:
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில், 1,644 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 13,91011 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச் சாவடி மற்றும் தேர்தல் பணிகளில் 8,046 பேர் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புப் பணியில் 370 துணை ராணுவப் படையினர், 
தமிழக போலீஸார் 1,299 பேர் என மொத்தம் 1,669 பேர் ஈடுபட உள்ளனர்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வீதம் 3,288 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,644 கட்டுப்பாட்டு கருவிகளும், வி.வி.பாட் கருவிகள் 1,644-ம் பயன்படுத்தப்பட உள்ளன. பதற்றமான 71 வாக்குச்சாவடிகள் மற்றும் மிக பதற்றமானவையாக அடையாளம் கண்டறியப்பட்ட 5 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 76 வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
மேலும், நுண் பார்வையாளர், வெப் கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இதுவரை, 158 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  தேர்தல் பறக்கும் படையினரால் ரூ. 76,11,000  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எளிதாக, சிரமமின்றி வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com