பற்றாக்குறையால் அதிகரித்து வரும்நுங்கு விலை

பெரம்பலூரில் கோடையையொட்டி நுங்கு விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள வேளையில், வரத்து குறைவால் அதன் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 


பெரம்பலூரில் கோடையையொட்டி நுங்கு விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள வேளையில், வரத்து குறைவால் அதன் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரூபாய்க்கு 4 நுங்கு சுளைகள் விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டில் 4 நுங்கு சுளை ரூ. 10-க்கு கிடைத்தது. தற்போது, 3 நுங்கு சுளை ரூ. 10-க்கு விற்கப்படுகிறது. 
இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தோல் வியாதிகள், பெரியம்மை, சின்னம்மை போன்றவை ஏற்படுகின்றன. 
இந்தக் காலங்களில் வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். 
இதனால் இளநீர், தர்ப்பூசணி, பனை நுங்கு, பழச்சாறு, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 
பொதுமக்களிடையே நுங்கின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில்  விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் ஒன்றிரண்டு மூட்டை நுங்குகளே விற்பனைக்கு வருகின்றன. அவையும் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்துவிடுவதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து நுங்கு வியாபாரி சந்திரசேகர் கூறியது: 
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம், தேவையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்களை குத்தகைக்கு எடுத்துள்ளோம். ஒரு மரத்துக்கு ரூ. 200 - ரூ. 300 வீதம் செலுத்த வேண்டும். ஆள்களை வைத்து நுங்கு இறக்கி, அவற்றைக் கொண்டு வந்து விற்பதால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு செலவிட வேண்டும். ஆள் கூலி, வாகனத்தில் எடுத்து வருவதற்கான செலவு போக ரூ. 500 முதல் ரூ. 800 வரை லாபம் கிடைக்கும். தினமும் 400-க்கும் மேற்பட்ட நுங்குகளை வெட்டி விடுவோம். ஒரே குடும்பமாகவும், நண்பர்களுடனும் சேர்ந்து பணியாற்றுகிறோம். கிடைக்கும் லாபத்தை பங்கிட்டுக் கொள்வோம். 
ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு சொந்தமான நிலங்களிலும், பொது இடங்களிலும் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருந்தன. இதிலிருந்து எந்தத் தொகையும் செலுத்தாமல் நுங்குகளை வெட்டி அவற்றை குறைந்த விலைக்கு விற்போம். ஆனால், தற்போது குறைந்தளவே பனை மரங்கள் உள்ளதால், நுங்கு குலைகளை விலைக்கு வாங்கி வந்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
பனைகள் வெட்டப்படுவதை தடுக்க அரசு முன்வரவில்லை எனில், ஒருசில ஆண்டுகளில் ஒரு நுங்கு சுளை ரூ. 10-க்கு விற்பனையாகும் நிலை ஏற்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com