குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தைகளைத் தவறான வழியில் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தைகளைத் தவறான வழியில் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, கொடியசைத்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். 
ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் குழந்தைகளை தவறான முறையில் பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
பாலக்கரையில் தொடங்கிய ஊர்வலம் வெங்கடேசபுரம் வழியாக சென்ற பேரணி ரோவர் பள்ளி நுழைவு வாயிலில் நிறைவடைந்தது. 
இதில், தாய்வீடு தொண்டு நிறுவன செயலர் ரேவதி, மருத்துவர் புவனேஸ்வரி, வளைகரங்கள் அமைப்பு தலைவி அமராவதி, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் கி. முகுந்தன், இந்தியன் செஞ்சிலுவை சங்க கெளரவத் தலைவர் என். ஜெயராமன் உள்பட தொண்டு நிறுவனத்தினர், வணிகர் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரியலூர்: அரியலூரில் மாவட்டக் காவல் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் காவல்  
கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கொடியசைத்து தொடக்கி வைத்துப் பேசியது: 
குழந்தைகளை தனியாக வாகனங்களிலோ, வீட்டிலோ பொது இடங்களிலோ விடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் குழந்தைகளைப் பள்ளிக்கோ, வேறு இடங்களுக்கோ அனுப்பக் கூடாது. அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம், குழந்தையின் உயரம், உடை, அங்க அடையாளம் தழும்பு, கண்ணின் நிறம் மற்றும் அணிந்திருந்த உடையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தை குறித்த நேரத்துக்கு வராவிட்டால் உடனே தேட வேண்டும். 
கோயில் திருவிழா, ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்லும்போது குழந்தைகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார். அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணியானது, பேருந்து நிலையம், கடைவீதி, மார்க்கெட் தெரு மற்றும் பிரதான சாலை வழியாகச் சென்று மீண்டும் அண்ணா சிலை அருகே முடிந்தது. 
ஊர்வலத்தில், கோட்டாட்சியர் சத்தியநாரணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதேபோல் ஜயங்கொண்டத்திலும் காவல் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com