அடிப்படை வசதியின்றி  அரசு மருத்துவமனை :நோயாளிகள் அவதி

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், போதிய அடிப்படை வசதிகளின்றி நோயாளிகளும், 

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், போதிய அடிப்படை வசதிகளின்றி நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். 
1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1996 ஆக. 9 முதல் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. 32 மருத்துவர்கள் மற்றும் 118 பணியாளர்களுடன், குழந்தைகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு உள்பட 39-க்கும் மேற்பட்ட பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில்  நாள்தோறும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 800-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.   
இம் மருத்தவமனையில் நோயாளிகளுக்கு போதிய இடவசதி இல்லை, தரமற்ற உணவு வகைகள் வழங்கப்படுவது, குடிநீர் பற்றாக்குறை மற்றும் பயிற்சி செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதாக நோயாளிகள், அவர்களது உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பயிற்சி செவிலியர்கள் சிகிச்சை: 
இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இரவு நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் பயிற்சி செவிலியர்களே முதலுதவி சிகிச்சை அளிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. உபகரணங்கள் பற்றாக்குறையால் குளுகோஸ் பாட்டில்களை ஜன்னல்கள், மின்சார வயர்கள், சுவிட்ச் பாக்ஸில் தொங்கவிடும் நிலை உள்ளது.  
இட நெருக்கடி: குழந்தைகள் மருத்துவப் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு போன்றவற்றில் உள்நோயாளிகளுடன் உறவினர்கள் உதவியாளர்களாக தங்கிக்கொள்கின்றனர். இப்பிரிவில் போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. மேலும், போதிய படுக்கை வசதிகளும் இல்லாததால் நோயாளிகள் தரையில் படுத்தவண்ணம் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தரமற்ற உணவு வகைகள்:  இம்மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாக இல்லை என  நோயாளிகள் புகார் கூறுகின்றனர். மேலும், கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லை எனவும் கூறப்படுகிறது. நோயாளிகள் அருகேயுள்ள குடியிருப்புகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய நிலை நீடிக்கிறது.
குடிநீர் பற்றாக்குறை: மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்களும் குடிநீருக்காக அருகே உள்ள கடைகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று வாங்கிவரவேண்டியுள்ளது. குறிப்பாக, குடிநீர் கிடைக்காத சமயங்களில் கூடுதல் விலைக்கு குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பிறந்த குழந்தைகளை துடைப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாத நிலை காணப்படுகிறது. பழுதான மின் விசிறி, விளக்குகள் இல்லாமல் கொசுக் கடியில் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். 
இதுகுறித்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கூறியது: 
மருத்துவமனையில் மூன்று வேளையும் உணவு கொடுக்கின்றனர். தினந்தோறும் ஒரே வகையான உணவாக வழங்கப்படுகிறது. அந்த உணவு சுத்தமானதாகவும் இல்லை. காலை வழங்கப்படும் உப்புமாவில் புழுக்கள் இருக்கின்றன. இங்கு, குடிநீர், கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. வார்டுக்கு ஒரு சில விளக்குகளே எரிகின்றன. மின்விசிறி இல்லை. இதனால், கொசுக்கடியால் அவதிப்படுகிறோம். அவ்வப்போது, உயரதிகாரிகள் ஆய்வுக்காக வந்தாலும் ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் வந்துவிட்டு செல்கின்றனர். 
எங்களது குறைகளை யாரும் கேட்பதில்லை.  மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததால், நோய் பாதிப்பு குறைய நீண்டநாள்களாகி நோயாளிகள் மேலும் அவதிப்பட வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேலும், போதுமான தங்குமிட வசதி இல்லாததால், மருத்துவமனையின் முன்பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றில் உறவினர்கள் உண்டு, உறங்குவதாகவும் ஆதங்கப்படுகின்றனர் நோயாளிகள். 
          எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகள், உறவினர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com