பொதுக்கிணறை தூர்வாரிய பொதுமக்கள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராத்தில் உள்ள வடக்காலக்கிணறு எனும் பொதுக்கிணற்றை தூர்வாரும்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராத்தில் உள்ள வடக்காலக்கிணறு எனும் பொதுக்கிணற்றை தூர்வாரும் பணியில் இளைஞர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் புதிய பயணம் நண்பர்கள் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
சுமார் 50 அடி ஆழமுள்ள இந்தக் கிணறு அப்பகுதியில் உள்ள மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு பயன்பட்டு வருகிறது. ஆழ்துளைக்குழாய்க் கிணறுகளின் வருகைக்கு முன்பு வரை இந்தக் கிணற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆழ்துளைக் கிணறுகள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் பல்வேறு இடங்களில் பொதுக்கிணறுகளைப் பயன்படுத்துவது குறைந்த போதிலும், பேரளி கிராமத்தில் உள்ள சில கிணறுகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. ஏரி, குளங்களுக்குப் பிறகு மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தது இந்தப் பொதுக்கிணறுகளே. நிலத்தடி நீர்மட்டத்துக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் பயன்பட்டு வந்த இந்தக் கிணறு இதுவரை வற்றியதே இல்லை. 
நிகழாண்டு நிகழும் கடும் வறட்சியால் 42 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்த இந்தக் கிணறு தற்போது வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், இக்கிணற்றை தூர்வார திட்டமிட்ட இளைஞர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் புதிய பயணம் நண்பர்கள் ஒன்றிணைந்து, கிணற்றில் கிடந்த நெகிழி உள்ளிட்ட குப்பைகள், கற்கள், சேதமடைந்த வாலிகள், குடங்கள் மற்றும் சகதிகள் உள்ளிட்டவைகளை முதல்கட்டமாக அகற்றினர். 
இதையடுத்து, கிணற்றில் உள்ள ஊற்றுகளில் சிறிதாக நீர்வரத் தொடங்கியதால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் இக்கிணற்றை அரசு சார்பில் மேலும் ஆழப்படுத்தி, எஞ்சியுள்ள சேற்றையும் அகற்றித்தர தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், பல ஆண்டுகளாக பல்வேறு பயன்களை அளித்து வந்த பொதுக்கிணற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்களின் செயல் பாராட்டுக்குரியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com