சுடச்சுட

  

  பெரம்பலூர் : வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி தொடக்கம்

  By DIN  |   Published on : 15th August 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில், பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் ஏரியிலிருந்து துறைமங்கலம் ஏரி வரையுள்ள சுமார் 26 கி.மீ. நீளமுள்ள வரத்து வாய்க்காலை ரூ. 30 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
  பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம், குரும்பலூர், பாளையம், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர், துறைமங்கலம் வழித்தடத்தில் 8 பெரிய ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சீமைக் கருவேல மரங்களாலும், ஆக்கிரமிப்புகளாலும் சூழ்ந்து, வரத்து வாய்க்கால்கள் இருந்ததற்கான அடிச்சுவடுகளே இல்லாத நிலை காணப்படுகிறது. 
  இந்த ஏரிகள் மூலமாக பாசன வசதி பெற்றுவந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீர் வசதியின்றி விவசாய நிலங்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். 
  இந்நிலையில், லாடபுரத்திலிருந்து துறைமங்கலம் வரையிலான வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, அதில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான முன்னேற்பாடுகளை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் மேற்கொண்டு வந்தார்.  
  பெரம்பலூர் அருகிலுள்ள செஞ்சேரி கிராமத்தில் புதன்கிழமை தொடங்கிய இப் பணியை, கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். 
  தொடர்ந்து, 15 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகளின் உதவியுடன் ஆக. 31 ஆம் தேதி வரை வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. சுமார் 26 கி. மீ. நீளமுள்ள இந்த வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி ரூ. 30 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. 
  இந்நிகழ்ச்சியில், ஜல் சக்தி அபியான் திட்ட உதவி இயக்குநர் வந்தனா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பி. மணி, மகளிர் கல்லூரி முதல்வர் எஸ்.எச். அப்ரோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai