பென்னாகரத்தில் கிராம மக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், பென்னாகரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம

பெரம்பலூர் மாவட்டம், பென்னாகரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், சிறுமத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பென்னாகரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஊராட்சியில், ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக உள்ளதால், பொறுப்பு ஊராட்சி செயலர் முறையாக பணிக்கு வருவது இல்லையாம். இந்நிலையில், கிராம சபைக் கூட்டத்தில் சிறுமத்தூர் ஊராட்சியில் ரூ. 49 லட்சத்து 130 செலவானதாக கணக்கு வாசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதையறிந்த கிராம மக்கள், ஊராட்சி செயலர் பணியில் இல்லாமல் எவ்வாறு இவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் கூற பொறுப்பான அதிகாரிகள் இல்லாததால் கிராம மக்கள் அதிருப்தியடைந்து, கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து பென்னாகரம் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இ. மரியதாஸ் அங்குசென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்து விளக்கம் அளிப்பதாக உறுதியளித்தார். 
இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு மீண்டும் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பரவாய், பேரளி உள்ளிட்ட 6 ஊராட்சிகளிலும் வரவு, செலவு கணக்குகளில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், நடைபெறாத பணிகளுக்கு கிராம மக்களிடம் கையெழுத்து கேட்டதாலும் அதிருப்தியடைந்த கிராம மக்கள் அந்தந்த ஊராட்சி செயலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கிராம சபைக்கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களும், இளைஞர்களும் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com