விநாயகர் சிலைகள் வைக்க தடையின்மைச் சான்று அவசியம்
By DIN | Published On : 22nd August 2019 09:50 AM | Last Updated : 22nd August 2019 09:50 AM | அ+அ அ- |

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் நிறுவ தடையின்மைச் சான்று பெறுதல் அவசியம் என்றார் மாவட்ட ஆட்சிர் வே. சாந்தா.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
விநாயகர் சிலை நிறுவ உள்ள அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நில உரிமையாளர்களிடமிருந்தும், அரசு இடமாக இருந்தால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சித் துறையிடமிருந்தும், நெடுஞ்சாலை மற்றும் வேறு துறைக்கு சொந்தமான இடமாக இருந்தால் அந்தந்த அலுவலர்களிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று, வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கோரும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, அரசு தெரிவித்துள்ள தகுதி அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கவேண்டும்.
நிறுவப்படும் விநாயகர் சிலைகள் தூய களி மண்ணால், நீரில் எளிதில் கரையக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட சிலைகள் அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக்கூடாது.
இதர வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அருகே விநாயகர் சிலை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிலைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சுமூகமான முறையில் கொண்டாட அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் சாந்தா.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.