கிருஷ்ண ஜயந்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. 

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி, பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் வளாகத்தில் நவநீத கிருஷ்ணன் தனி சன்னதியில் நவநீத கிருஷ்ணருக்கு அபிஷேகமும், மகாதீப ஆராதனையும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. தொடர்ந்து, எடத்தெருவில் உள்ள ராஜகோபால சுவாமி பஜனை மடத்தில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். 
இதேபோல, பெரம்பலூர் மேரிபுரம் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கிருஷ்ண லீலா உபன்யாசம், மகா ஆரத்தி, கிருஷ்ண அவதார நிகழ்ச்சி மற்றும் அஷ்ட லட்சுமி கலசங்களுக்கு 1,008 புனித தீர்த்தங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.  
தொடர்ந்து, செஞ்சேரியில் உள்ள ஹரே கிருஷ்ண நிலத்தில் சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்குகிறது. காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவதம் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு ஹரிநாம சங்கீர்த்தனம், மதியம் 12 மணிக்கு கிருஷ்ணலீலா உபன்யாசம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 
விழா ஏற்பாடுகளை இஸ்கான் அமைப்பின், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதானந்த சைதன்யதாஸா மற்றும் இஸ்கான் தன்னார்வ தொண்டர்கள் செய்துள்ளனர்.
அரியலூரில்... 
கோகுலாஷ்டமியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோதண்டராமசாமி திருக்கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணருக்கு கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாரதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு துளசி, லட்டு, அவல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 
ஆஞ்சநேயர் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.  ஆஞ்சநேயர் ஹோமம், கிருஷ்ண மந்திர ஹோமங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை  நடைபெற்றது. மாலையில் ஆஞ்சநேயருக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. 
திருமானுர் அருகேயுள்ள பெரியமறை கிராமத்திலுள்ள சீனிவாசப்பெருமாள் கோயிலில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. 
இதேபோல் திருமானூர், செந்துறை, தா.பழூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, பொன்பரப்பி, சுத்தமல்லி, சித்தமல்லி, விளாங்குடி, உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com