சாலை விதிகள் மீறல்: 22 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 25th August 2019 03:32 AM | Last Updated : 25th August 2019 03:32 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில், சாலை விதிகளை மீறியதாக 22 வாகனங்களைப் பறிமுதல் செய்து, ரூ 2.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா உத்தரவின்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமையிலான அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தகுதிச் சான்றுகளை புதுப்பிக்காத ஆட்டோ, கார் உள்ளிட்ட 10 வாகனங்கள், அரசுக்கு வரி செலுத்தாத 2 ஜேசிபி இயந்திரம், அதிக பாரம் ஏற்றிவந்த கனரக வாகனம் 10 ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதிவேகம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட வகையில் என மொத்தம் 30 வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.