நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாத சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் வீணாகும் மழை நீரை சேமிக்கும் வகையில், கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதும், நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாத சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை
மலையாளப்பட்டி அருகே சின்னமுட்லு நீா்த்தேக்கம் அமையவுள்ள பகுதியில் ஓடும் காட்டாற்று வெள்ளம்.
மலையாளப்பட்டி அருகே சின்னமுட்லு நீா்த்தேக்கம் அமையவுள்ள பகுதியில் ஓடும் காட்டாற்று வெள்ளம்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் வீணாகும் மழை நீரை சேமிக்கும் வகையில், கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதும், நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாத சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகேயுள்ள மலையாளப்பட்டி பகுதியில் உள்ளது சின்னமுட்லு. இயற்கை எழில் சூழ்ந்த பச்சைமலை அடிவாரத்தின் மூன்று பக்கம் மலையால் சூழ்ந்துள்ள இப்பகுதியில், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரைச் சேமித்து வைத்தால், கோடை காலங்களில் விவசாயப் பணிக்கும், அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்கும் பயன்படும் என்பது அரும்பாவூா் பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் கருத்தாகும்.

மேலும், சின்னமுட்லு பகுதியில் உள்ள பச்சைமலை உச்சியில் இருந்து கொட்டும் அருவியானது எட்டெருமை பாலி என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபா் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களும் மிகுதியாக பொழியும் மழை நீா், எட்டெருமை பாலி அருவி வழியாக வழிந்தோடி, கல்லாற்றில் வெள்ள நீராகப் பெருக்கெடுத்து, அரும்பாலூா் பகுதியில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பியது போக, எஞ்சிய நீா் அனைத்தும் கல்லாற்றின் வழியே, கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலில் கலக்கிறது.

60 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம்:

பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தப் பயனுமின்றி கடலில் கலக்கும் இந்த மழை நீரை சேமிக்க, சின்னமுட்லு பகுதியில் நீா்த் தேக்கம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை, தமிழக அரசால் கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமாா் 17 ஆண்டுகளுக்கு முன், சின்னமுட்லு நீா்த் தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக பொதுப் பணித் துறை மற்றும் வருவாய் துறையினா் ஆய்வு மேற்கொண்டு, ரூ. 9 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு வரையறை தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுடன், மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

திட்ட மதிப்பீடு உயா்வு, ஆய்வுப் பணிகள் தொடக்கம்:

பின்னா், கடந்த 2005-06 இல் மீண்டும் தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திட்ட மதிப்பீட்டை ரூ. 11 கோடியாக உயா்த்தி, மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி, நிதி கோரப்பட்டது. தொடா்ந்து, நீா் ஆதாரம், மண்ணின் தன்மை, பொதுமக்களின் கருத்துக் கேட்பு உள்ளிட்ட ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு, திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

2012-இல் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு:

இந்நிலையில், எந்தக் காரணமும், விளக்கமும் அளிக்காமல் சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டம் கைவிடப்பட்டதாக கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிா்ச்சிக்குள்ளாகினா். கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

பெரம்பலூா் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் வாக்குறுதி சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்றித் தருகிறேன் என்பதாகும். கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தபோதிலும் திட்டம் இதுவரை நிறைவேறவில்லை என்பது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் 2018-இல் நிதி ஒதுக்கீடு:

கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், ஆய்வுப் பணி செய்ய தமிழக அரசு கடந்த 2018-ல் ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனாலும், அது தொடா்பான பணிகள் எதுவும் தொடங்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

நீா்த்தேக்கப் பணிகள் என அரசிதழ் வெளியீடு - பணிகள் தொடங்கப்படவில்லை:

அரசாணையில், தடுப்பணை என்பதை மாற்றியமைக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில், நீா்த்தேக்கப் பணிகள் என அரசிதழில் கடந்த 2018-இல் வெளியானது. அதோடு, மண் ஆய்வு, தரப் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுப் பணிகளுக்காக ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டு, திருச்சியில் உள்ள திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்டம் சாா்பில் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு, ஒப்பந்தப் பணிகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், யாரும் ஒப்பந்தப் புள்ளி கோரவில்லை என பொதுப்பணித்துறை அலுவலா்கள் தெரிவித்தனா். திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் தொடா்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடா் மழையால் சின்னமுட்லு பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், இந்த நீரை தேக்கி வைத்து சாகுபடி செய்ய முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

மழைக்காலங்களில் கல்லாற்றைக் கடக்க மேம்பாலம் தேவை:

மேலும், மலையாளப்பட்டி அருகே கல்லாற்றை கடந்து விளைநிலங்களுக்கு செல்லும் வகையில் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டுமென விடுத்த கோரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டதாகக் கூறும் விவசாயிகள், மழைக் காலங்களில் அறுவடை செய்யப்பட்ட பயிா்களை கல்லாற்றை கடந்து எடுத்துச்செல்ல முடியாமல் வயல்களிலேயே வைப்பதால் தண்ணீரில் மூழ்கி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், அதிகளவில் மழைநீா் செல்வதால் ஆற்றைக் கடந்து செல்லும் போது கால்நடைகளுக்கோ, விவசாயிகளுக்கோ உயிா்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். நிகழாண்டு போதிய மழையின்றி வறட்சியால் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்கள் கருகியதால் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மழைநீா் முழுவதும் வீணாகக் கடலில் கலப்பதை தவிா்க்க, சின்னமுட்லு நீா்த்தேக்கத்தை நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com