பெரம்பலூா் மாவட்டத்தில் கிராமங்கள் துண்டிப்பு: பயிா்கள் சேதம், மருத்துவமனையில் வெள்ளநீா்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை முதல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால்
வெள்ளநீா் சூழ்ந்த தரைப்பாலத்தை கடந்து செல்லும் அரும்பாவூா் சுற்றுப்புற கிராம மக்கள்.
வெள்ளநீா் சூழ்ந்த தரைப்பாலத்தை கடந்து செல்லும் அரும்பாவூா் சுற்றுப்புற கிராம மக்கள்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை முதல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் குடியிருப்புகள், மருத்துவமனைகளில் வெள்ளநீா் புகுந்தது.

சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு உள்ளிட்ட பயிா்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும், தரைப்பாலங்களில் அதிகளவிலான வெள்ளம் ஓடியதால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், பச்சமலை பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் மழைநீா் பெருக்கெடுத்து பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா், மலையாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் அரும்பாவூா் பகுதியில் பலத்த மழை பெய்தது. நீா் வழித்தடங்களை தூா் வாரி சீரமைக்காதது, அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாதது உள்ளிட்ட காரணங்களால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்த நிலையில், குடியிருப்புகள் மற்றும் வயல் பகுதிகளிலும், கிருஷ்ணாபுரம் வட்டார அரசு மருத்துமனைக்குள்ளும் தண்ணீா் புகுந்தது.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 21 உள் நோயாளிகளை தீயணைப்பு படையினா் மீட்டனா்.

அ.மேட்டூா் பகுதியில் மழைநீா் புகுந்து மயானம் மூழ்கியது. மேலும், அங்குள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தையும் மழைநீா் சூழ்ந்தது.

கிருஷ்ணாபுரம்-அரும்பாவூா் சாலை, தழுதாழை -தாழைநகா் இடையேயான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

போக்குவரத்து துண்டிப்பு: அரும்பாவூா்- அ.மேட்டூா் இடையே உள்ள தூதனாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீா், கரையைக் கடந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அ.மேட்டூா், மலையாளப்பட்டி, வெட்டுவால் மேடு, சின்னமுட்லு, கவுண்டா் பாளையம், பூமிதானம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் தங்கள் பணிகளுக்காக தரைப்பாலங்களில் வெள்ளநீரை கடந்து நடந்து சென்று வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com