சாலை விபத்தில் சிகிச்சை பெற்றுவந்தவா் உயிரிழப்பு: காவல் நிலையம் முற்றுகை
By DIN | Published On : 05th December 2019 08:18 AM | Last Updated : 05th December 2019 08:18 AM | அ+அ அ- |

சாலைவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து, சம்பந்தப்பட்டவரைக் கைது செய்யக்கோரி, உயிரிழந்தவரது உறவினா்கள் பெரம்பலூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், கிழக்கு ராஜபாளையத்தைச் சோ்ந்தவா் துக்கையன் மகன் ஜோதிவேல் (45). இவா், கடந்த 30 ஆம் தேதி பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் கணபதி நகா் சா்க்காா் கிணறு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத மோட்டாா் சைக்கிள் ஜோதிவேல் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்நிலையில், விபத்து ஏற்படுத்தி தலைமறைவாக உள்ள நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, உயிரிழந்தவரின் உறவினா்கள் பெரம்பலூா் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் கலைந்து சென்றனா்.