நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th February 2019 08:36 AM | Last Updated : 14th February 2019 08:36 AM | அ+அ அ- |

தமிழ்நாடு நெடு ஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் கருப்புக் கொடியேந்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில், துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர்கள் டி. ராமநாயகம், எஸ். ரஜினி, மாவட்ட இணைச் செயலர் பி. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலர் எஸ். மகேந்திரன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பொன். ஆனந்தராசு, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாவட்டச் செயலர் ஆர். முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். பணி நீக்கக் காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய தொகுப்பிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சாலைப் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். மாவட்ட இணைச் செயலர் ஏ. ராஜா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கே. கருணாநிதி நன்றி கூறினார்.