உடையும் புதைசாக்கடை குழாய்களால் சுகாதாரச் சீர்கேடு

பெரம்பலூர் நகராட்சியில் ஆங்காங்கே உடையும் புதை சாக்கடைக் குழாய்களால் சாலைகள் சேதமடைந்து

பெரம்பலூர் நகராட்சியில் ஆங்காங்கே உடையும் புதை சாக்கடைக் குழாய்களால் சாலைகள் சேதமடைந்து வருவதோடு, வரத்து வாய்க்கால்கள் கழிவுநீர் கால்வாய்களாக மாறியுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது.  
பெரம்பலூர் நகராட்சி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட புதை சாக்கடைத் திட்டத்தை கடந்த 2013-இல் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். பின்னர், நகராட்சியின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பெரம்பலூர் நகர்ப் பகுதியின் பிரதான சாலைகளில் உள்ள புதைச் சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் உருவாகின. 
விளாமுத்தூர் சாலை, வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் சாலை ஆகிய பகுதியிலும், அதைத் தொடர்ந்து நகரின் பிரதான சாலைகளிலும் புதை சாக்கடை குழாய்கள் உடைந்து ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் உருவாகின. 
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரோஸ் நகர் செல்லும் பிரதான சாலையில் புதை சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு மிகப் பெரும் பள்ளம் உருவாகியது.  இருப்பினும், அதிர்ஷ்டவசமாக விபத்துகள் ஏதும் இல்லை.
இந்தக் குழாயிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, அங்குள்ள வயல் பகுதிகளில் கழிநீர் தேங்கி விவசாய நிலங்கள் பாழடைந்து வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்த பின்னர், குழாய்கள் சீரமைப்புப் பணி நடைபெற்றது. 
இதற்காக புதை சாக்கடைத் திட்டத்துக்கான ஆள் இறங்கு குழிகளில் களிமண் கொட்டப்பட்டு அடைக்கப்பட்டதால் கழிவுநீர் குழாய்கள் நிரம்பி, ரோவர் பள்ளி சாலையில் கழிவுநீர் வெளியேறி வருவது தொடர்கிறது.
இந்நிலையில், புதை சாக்கடைத் திட்ட கழிவுநீர் குழாய்களில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றினால் மட்டுமே உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்யும் முடியும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாசன வாய்க்கால்கள் கழிவுநீர் ஓடும் கால்வாய்களாக மாறியுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி. ரமேஷ் கூறியது: 
விவசாய நிலங்களும், சாலையோரமும் கழிவுநீர் கால்வாய்களாக மாறியுள்ள நிலையில், நிலத்தடி நீர் வெகுவாக மாசடைந்து வருகிறது. எனவே, குழாய் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல லட்சம் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது.
பராமரிப்புச் செலவுக்கு ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கில் செலவிடும் நகராட்சி நிர்வாகம், பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்பார்வை செய்ய வேண்டும். மாதம்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, முறையாக கண்காணித்தால் மட்டுமே இத்திட்டம் இனிவரும் காலங்களில் பயன்பாட்டில் இருக்கும் என்றார் அவர்.
இதுகுறித்து கேட்க நகராட்சி ஆணையரை செல்லிடபேசியில்பேசியில் தொடர்புகொண்டபோது, அழைப்பை அவர் ஏற்கவில்லை. 
பொதுமக்களின் நலன் கருதி, நகரில் நிலவும் அவலநிலையை மாற்றிட புதை சாக்கடைத் திட்ட குழாய் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இப் பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகளின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com